Friday 25 March 2011

நெவர் லெட் மீ கோ - ஆங்கில திரைப்பட விமர்சனம்


நெவர் லெட் மீ கோ (Never Let Me Go) திரைப்படம், உலக இலக்கிய விருதுகளில் மிக உயரிய விருதான, புக்கர் விருதை (Booker Prize) பெற்ற,  ஹாசு இஷிகாரோ (Kazuo Ishiguro) அவர்களின் நாவலினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலும் புக்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டைம் (Time) நாளிதழ் கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுல் ஒன்றாக இதனை அறிவித்து பாராட்டியது.  

ஹாசு இஷிகாரோ
பொதுவாக நாவல்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் வெளிவரும் பொழுது, திரைப்படத்தைக் காட்டிலும் நாவல் சிறந்ததாக இருந்தது என்றும், நாவல் கொடுத்த தாக்கத்தினை திரைப்படம் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். சமிபத்தில் கூட மறைந்த சுஜாதா அவர்களின்  நாவலினை அடிப்படையாக கொண்டு தமிழில் வெளிவந்த ஆனந்த தாண்டவம் திரைபடம் இத்தகைய காரணங்களினால் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கும்.  ஆனால் மிகச் சில திரைப்படங்கள் மட்டுமே அவற்றின் அடிப்படையான நாவல்களைக்  காட்டிலும் நன்றாக இருந்தது என நாம் கொண்டாடும் அளவிற்கு பெயர்தட்டி செல்லும். அவ்வாறான திரைப்படங்களுள் இது பிரதான இடத்தை பிடிக்குமளவிற்கு இதன் தாக்கம் நம்மை பேச வைக்கும்.

இத்திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஸன் (Science Fiction) வகையினை சேர்ந்தது. நாம் பல சயின்ஸ் ஃபிக்ஸன் (Science Fiction) திரைப்படங்களை பார்த்திருப்போம். இவ்வகை திரைப்படங்கள் பொதுவாக வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என்பதை ஊகித்து அதற்குள் கற்பனை கதாபாத்திரங்களை உலாவவிட்டு ஒருவிதமான சாகச அனுபவமாக திரையில் தோன்றும். சென்ற ஆண்டில் திரைக்கு வந்த அவதார் (Avatar) திரைப்படம் மிகச் சரியாக மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டு உலகம் முழுதும் மிகப் பெரும் வெற்றியை பெற்றதிலிருந்து இத்தகைய திரைப்படங்களின் ஆளுமை ஹாலிவுட்டில் அதிகம் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்.  ஆனால் இங்கு காணும் இத்திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கும் மேற்கூறிய அம்சங்கள் எதனையும் பார்க்க முடியாது. மாறாக ஒரு பெண்ணின் கடந்த காலத்தை மிக நுண்ணிய உணர்வுகளின் குவியலாக பிரதிபலித்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பு. 

இருபத்தெட்டு வயதான கேதி ஹெச் (Kathy H), தன் பள்ளி நினைவுகளை விவரிக்கும் விதமாக திரைப்படம் துவங்குகிறது. கேதி, ஹெயில்ஷம் (Heilsham Boarding School) என்ற  விடுதிப் பாடசாலையில் தன் தோழி ரூத் (Ruth) உடன் படித்து வருகிறாள். கேதி மிகவும் நிதானமான பெண். எந்த ஒரு குற்றத்திற்கும் பின்னும் உள்ள குற்றவாளியின் மண தூண்டுதலை புரிய முயர்ச்சிப்பவள். வாழ்க்கையில் பெரிய கனவுகள் ஏதும் இன்றி வாழ்க்கை தருபவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழ்பவள். மாறாக, ரூத் மற்றவர்களை அதிகாரம் செய்பவள். வாழ்க்கையில் தான் நினைத்த அனைத்தும் நடக்கும் என நினைத்து கனவுலகில் மிதப்பவள். தன் சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தி கொள்பவள்.

காரே முல்லிகன்
ஹெயில்ஷம் பள்ளி அவர்களை சிறைபடுத்தியிருந்தது. அங்கு படிக்கும் மாணவர்களை வெளியுலக தொடர்பில்லாது வைத்திருந்தது. ஒருநாள், கேதியின் வகுப்பு மாணவன்  டாமி (tommy), பிற மாணவர்களால் இகழப்படுவதை கண்டு கேதி அவனுக்கு உதவ அவனிடம் செல்கிறாள். டாமி அவர்கள் மேலுள்ள கோபத்தில் இவளை அறைந்து விடுகிறான். இதற்கு பின்னும் கேதி அவனுடன் அன்புடன் பழகுகிறாள். டாமிக்கும் கேதியின் நட்பு பிடித்திருந்தது. அவளது நட்பு அவனை மற்றவர்களின் இகழ்ச்சிகளை இயல்பாக எடுத்துகொள்ள செய்தது. கேதி மற்றும் டாமி நட்புடன் பழகுவது மெல்ல காதலாக மாறுவதை ரூத்தால் உணர முடிந்தது. ரூத் கேதியின் புதிய காதலை கண்டு பொறாமையடைந்து அவனை தன்வசம் வர செய்ய, அவனிடம் அவனை தான் காதலிப்பதாக தெரிவித்து டாமியை தன் காதலனாக்கி கொண்டாள். டாமி அவனை இகழ்ந்த ரூத்தை தன் காதலியாக ஏற்றது, கேத்திக்கு ஆச்சர்யத்துடன் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.  

ஒரு கட்டத்தில், பள்ளி ஆசிரியை ஒருவரால் ஹெயில்ஷம் பள்ளியில் வளரும் அவர்கள் மனிதர்களுக்கு செயலிழந்த இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் வழங்க அவர்களின் மாதிரி ஜீன்களை கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குளோன்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அதே நேரம், கேதி டாமியை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தாள். மற்ற பள்ளி பருவ காதலர்கள் முரண்பாட்டால் விலகும் பொழுது, டாமி மற்றும் ரூத் இருவரின் காதல் பலமாக வளர்ந்திருந்தது. 

கேரா நைட்லீ
பிறகு சில ஆண்டுகள் கழித்து, பள்ளி கல்வி முடிவடைந்த நிலையில், டாமி, ரூத் மற்றும் கேதி காட்டேஜ்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குதான் அவர்கள் தங்கள் உறுப்பு தானம் செய்ய அழைப்பு வரும்வரையில் தங்க வேண்டியிருந்தது. இவர்களை போல பல பள்ளிகளை சேர்ந்த குளோன் மாணவர்கள் அங்கு குழுமி தங்கியிருந்தனர். அவர்களுள் இரு காதலர்கள் இவர்களிடம் ஹெயில்ஷம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் டிஃபெரல் (Differal ) சலுகையினை எவ்வாறு மற்ற பள்ளி மாணவர்கள் பெறுவது என வினவினர். தங்களுக்கு அது போன்ற சலுகை அளிக்கப்படுவது பற்றி தெரியாது என இவர்கள் கூற அவர்கள் அதனை பற்றி விளங்க கூறினர்.

அதாவது, ஹெயில்ஷம் பள்ளியில் படித்த இருவர் உண்மையிலேயே காதல் கொன்டிருந்தால், அதை அவர்கள் நிருபீக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில ஆண்டுகள் சேர்ந்து வாழ அனுமதிப்பதற்காக அச்சலுகை இருப்பதாக அவர்களால் கூறப்பட்டது. அதோடு, இச்சலுகை காலத்தில் அவர்கள் தங்கள் உறுப்புகளை தானம் தர அவசியமில்லை எனவும் கூறினர். பிறகு ரூத் கேதியை வெறுப்பேற்றும் விதமாக டாமியை அவள்முன் கட்டிபிடித்து கொஞ்சினாள். இதனால் வெறுப்படைந்த கேதி, தான் உறுப்பு தானம் தரும் வேலை வரும் வரை, அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர்களை விட்டு செல்ல, தானம் தரும் மற்ற குளோன் இளைஞர்களுக்கு (Donor) பணிவிடை புரியும் செவிலியாக (Carer) பணியாற்ற முன்வந்தாள். இதனால், அவள் வேறு, வேறு நகரங்களுக்கு அனுப்பபட்டாள். 

பிறகு சில ஆண்டுகள் கழித்து, ரூத்தை, ஒரு மருத்துவமனையில் அவளின் மூன்றாவது உறுப்பு தானம் செய்யும் தருணத்தில் எதேச்சையாக கேதி சந்திக்கிறாள். பிறகு அவளுக்கு கேரராக பணிவிடை புரிகிறாள். ரூத், அவளுக்கும், டாமிக்கும் உண்டான காதல் காட்டேஜிலேயே முறிவடைந்ததை பற்றி கேத்தியிடம் கூறுகிறாள். அதோடு அவனும் தன் இரண்டு உறுப்பு தான ஆபரேஷன்கள் முடித்துவிட்டான் என்பதையும் அவளுக்கு கூறி மூவரும் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என தெரிவிக்கிறாள். அவ்வாறாகவே மூவரும் அருகிலுள்ள கடற்கரைக்கு செல்கின்றனர். 

அங்கு ரூத், தன் பொறாமையினால்தான், டாமியை கேதியிடமிருந்து அபகரித்ததாகவும், நிஜத்தில் அவர்கள் இருவர் மட்டும்தான் உண்மை காதல் கொண்டுள்ளனர் எனவும் கூறி தன்னை மன்னிக்குமாறு கேதி மற்றும் டாமியிடம் கூறுகிறாள். பிறகு ரூத் தன்னிடம்  டிஃபெரல் சலுகையை தரும் ஆசிரியையின் முகவரி உள்ளது என்று கூறி அதனை கேதி மற்றும் டாமி கைகளில் தருகிறாள். 

முதன்முறையாக கேதி தன் வாழ்க்கையை பற்றி கனவு காண்கிறாள். பிறகு அவர்களின் விதி அவர்களை மறுபடியும் பிரிக்கபோகிறது என்பதை அறியாது, இருவரும் ரூத் கூறிய ஆசிரியையிடம் அச்சலுகையை பெற செல்கின்றனர்.... 

ஆன்ரூ கார்ஃபில்டூ 
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சமாக கதாப்பாத்திரத் தேர்வு அமைந்துள்ளது. கேதியாக வரும் காரே முல்லிகன் (Carey Mulligan) தன் மெல்லிய முக பாவனைகளின் மூலம் தன் வலியினை உணர்த்துவதிலிருந்தே அக்கதாபாத்திரத்தின் ஸ்திரத்தன்மை எங்கெங்கு திரைப்படத்தில் உடைகிறது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக வாழ்க்கையில் எதுவுமே கைகூடாத நிலையில் மரணம் மட்டுமே முடிவு என்கிற நிலையில் தன் உறுப்பு தான அழைப்பிற்காக காத்திருக்கும் அந்த இறுதி தருணங்கள் நிச்சயமாக பார்க்கும் நம்மில் மரணத்தின் வலி மற்றும் வாழ்க்கை வெறும் வெற்றிடமாக மாறும்போது ஏற்படும் மன சுமையை ஓங்கி உரைக்கிறது. அத்தகைய இக்கட்டான முடிவையும் வாழ்க்கையின் இயல்பு எனக் கருதி தன் வேலையை மட்டும் செய்துகொண்டு அமைதியாய் இருப்பது கேதி கதாப்பாத்திரத்தை மற்றவற்றுடன் மிக சுலபமாக வேறுபடுத்தி காட்டுவதோடு அல்லாமல் வாழ்க்கை இயல்பை எடுத்துரைக்கிறது.    

ரூத் கதாபாத்திரம் இரண்டு பரிமாணங்களாக காட்டப்பட்டுள்ளது. சிறுவயதில் தன் வாழ்க்கை பற்றிய எதிபார்ப்புகளுடன் பிறரை மதிக்காது தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மட்டும் தன் நண்பர்களை பயன்பத்துவது, பின் தன் இளமை காலத்தில், எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேறாமல் மரணத்திற்காக மட்டும் காத்து கிடக்கும்போது தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்கு பிராயிசித்தம் தேடுவது என எந்த ஒரு சராசரி மனிதனையும் அச்செடுத்து வார்த்தது போலான பாத்திரப்படைப்பு. இத்தகைய உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரங்களை சரித்திர படங்களில் ஏற்று நடித்த அனுபவத்தில் கேரா நைட்லீ (Keira  Knightley) இந்த ரூத் கதாப்பாத்திரத்தில் பிரமாதபடுத்துகிறார். 

டாமியாக வரும் ஆன்ரூ கார்ஃபில்டூ (Andrew Garfield) தன் இயல்பான நடிப்பினால் அந்த கதாபாத்திரதிற்குரிய மனக்குமுறல்களை வெளிபடுத்துகிறார். இத்திரைப்படத்தின் இசை, கதையின் போக்கோடு கரைந்து உருகுகிறது. மனித உணர்சிகளுக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் என்பதால் குளோனிங் மற்றும் இதர அறிவியல் சார்ந்த விவரங்கள் மற்றும் அதன் சாத்தியம் போன்றவை இதில் பேசப்படவே இல்லை. 

நீங்கள் இத்திரைப்படத்தை எவ்வித அறிமுகமுமின்றி காணும்போது உண்மையிலேயே இவ்வாறு நடந்தும் இருக்ககூடும் என நம்பவைக்கும் விதம் திரைக்கதை நம்மை ஒரு கொடிய வரலாறை படிப்பதை போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. 

நெவர் லெட் மீ கோ - வாழமுடியாதவர்களின் குரல்.

ட்ரெயிலர்



0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.