Monday 14 March 2011

என்சாண்டட் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


என்சாண்டட் (Enchanted) ஆங்கில திரைப்படம், வால்ட் டிஸ்னியின் (Walt Disney) மற்றுமொரு க்ளாசிக் ஃபேண்டசி (Classic Fantasy) திரைப்படம். டிஸ்னி, கார்ட்டூன் திரைப்பட வரலாற்றில் ஒரு சக்ரவர்த்தியாக திகழ, இந்நிறுவனம் எடுத்த ஃபேரி டேல் (Fairy Tale) திரைப்படங்கள் ஒரு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம். அவ்வகையில் இத்திரைப்படமும் டிஸ்னிக்கே உரிய  ஃபேரி டேல் கதை சாயலில் அதே நேரம் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனமாக்கப்பட்ட புனைவுக் கதையை அடிப்படையாக கொண்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். அதுமட்டுமில்லாது மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டத் திரைப்படம். 

 ஃபேரி டேல் கதைகள் என்கிற பொழுது, நமக்கு பெரும்பாலும் நினைவில் வருபவை, நாம் நம் பள்ளி நாட்களில் ஆங்கில பாடத்தில் படித்த சூன்யக்காரிகளும், மந்திரவாதிகளும் நிரம்பிய கதைகளே. அவை பொதுவாக ராஜா ராணி காலத்தில் நடைபெருபவையாக இருக்கும். ஈ முதல் டிராகன் வரை மனிதரோடு பழகி உரையாடும். கண்டிப்பாக "நலம்" என்று இறுதியில் எண்டிங் நோட் (Ending Note) போடுமளவுக்கு மகிழ்ச்சிகரமான முடிவை கொண்டதாக இருக்கும்.  நீங்கள் இதை எல்லாம் யூகித்திருந்தால் கண்டிப்பாக இத்திரைப்படத்திலும் இத்தகைய விஷயங்களை நீங்கள் காணலாம். பின் என்ன இதில் நவீனம் என்று கேட்டபது புரிகிறது. இவை அனைத்தும் நிகழ் காலத்தில் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்றால் என்னவாகும் என்பதை நகைச்சுவை மற்றும் காதல் சேர்த்து சிறுவர் முதல் அனைவரையும் கவரும் வகையில் திரைப்படமாக எடுத்துள்ளனர். 

எல்லா ஃபேரி டேல் கதைகளை போல, ஒரு நாள், அண்டாலஷியா (Andalasia) என்ற ஒரு மாய உலகில் கனவில் மட்டுமே கண்ட ராஜ குமாரனுக்காக காத்திருக்கும் ஜிஷைல் (Giselle), தன் காதலனை எண்ணி உருகி பாடலொன்றை பாட, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரன் எட்வர்ட் (Edward) அதை கேட்டு மயங்கி,  தனக்கான பெண் இவளே என்று முடிவெடுத்து அவளை காண விரைகிறான். பிறகு இருவரும் பார்த்த தருணத்திலேயே காதல் மலர இருவரும் அன்றே மணமுடிக்க முடிவெடுக்கின்றனர். ஒரு சாதாரண கும்பத்தை சேர்ந்த பெண் ஜிஷலை ராஜ குமாரியாக விரும்பாத எட்வர்டின் மாற்றாந்தாய் ராணி நரிஷா, தன் மந்திர ஆற்றலால் அவளை சபித்து தன் பேச்சுக்கு கட்டுப்படாத போலீஷை அரசியல்வாதி, தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றுவது போல் ஜிஷலை பூமியில் உள்ள மணமுறிவு (Divorce) அதிகமாக நிகழும் நியூ யார்க் நகருக்கு அனுப்புகிறாள். 

ஜிஷல் செய்வது அறியாது நியூ யார்க்கில் தவிக்கிறாள். எப்படியும் தன் காதலன் எட்வர்ட் தன்னை மீட்டு மறுபடியும் அண்டாலஷியாவிற்கு அழைத்து செல்வான் என நம்பி வீதியில் அமர்ந்த்ருக்கிறாள். அப்பொழுது மணமுறிவு வழக்குகளை எடுத்து நடத்தும் வழககறிஞர், ராபர்ட் அவளை ஆதரித்து தன் விட்டில் தங்க அனுமதிக்கிறான். ஜிஷல் விட்டை சுத்தம் செய்ய, பெருக்க தன் மயக்கும் ஒலியால் புறாக்களையும், எலிகளையும் அழைத்து வேலை வாங்குகிறாள். இதனைக் கண்ட ராபர்டின் மகள் சிறுமி மொர்கன் அவளை ஃபேரி டேல் கதைகளில் வரும் ஒரு ராஜகுமாரி என நம்புகிறாள். அவளை தேடி எட்வர்ட் நியூ யார்க் வருகிறான். அதே நேரத்தில் எட்வர்ட் ஜிஷலை சந்திக்காத வண்ணம் தடுக்க, நரிஷா தன் மெய்க்காவலன் நதேநியளிடம் (Nathaniel) தன் மந்திர ஆப்பிள்களைக் கொடுத்து அவனை நியூ யார்க்கிற்கு அனுப்புகிறாள்.

நதேனியல் ஜிஷலை கொல்ல அந்த மந்திர ஆப்பிள்களில் ஒன்றை அவள் உண்ணுமாறு செய்ய வேண்டும். அதற்காக அவன் விதவிதமான வேடங்களில் வந்து ஆப்பிள்களை அவளுக்கு அளிக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் உண்ணாமல் தப்பிக்கிறாள். இதனால்,  நரிஷா அவன் மேல் கடும் கோபம் கொள்கிறாள்.

ராபர்டின் காதலி நான்சி(Nancy), ஜிஷல் ராபர்ட் விட்டில் இருப்பதை தவறாக எண்ணி ராபர்டுடன் சண்டையிட்டு பிரிகிறாள். ஜிஷல், ராபர்ட்டிர்காக மலர்களை நூற்று அதில் அதற்கு மறுநாள் நடைபெறும் கிங் அண்ட் கியீன் பால் கலை நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டை வைத்து கட்டுகிறாள். பிறகு தன் ஒலியால் புறாக்களை அழைத்து அம்மாலையினை நான்சியிடம் கொடுக்குமாறு புறாக்களுக்கு சொல்கிறாள். இதனை கண்டு ராபர்ட் ஆச்சர்யமடைந்ததொடு அல்லாமல் புறாக்கள் எவ்வாறு நான்சியிடம் அதனை சேர்க்கும் என வினவி அவளை ஒரு வெகுளி என நினைக்கலானான்.

ராபர்ட் ஜிஷலின் வெகுளித்தனத்தால் அவள்பால் கவரப்படுகிறான். தன் மகளுடன் உள்ள அவளின் அன்யோன்யத்தை கண்டு தனக்கு அவள் மனைவியாக அமைந்தால் நன்றாக இருக்கும் எனவும் நினைக்கிறான். ஆனால் ஜிஷல் எட்வர்டுக்காக காத்திருப்பதை எண்ணி அதனை அவளிடம் மறைத்து ஒரு நண்பன் போல் பழகலானான். ஜிஷல் ஒரு சில மணி நேரமே பழகிய எட்வர்டை விட தன்னை யார் என்றே தெரியாத போதிலும் தன்னை அன்பாக நடத்தும் ராபர்ட்டிடம் தன்னையுமறியாமல் காதலில் விழுந்தாள்.


இத்தகைய மனப் போராட்டத்தில் இருவரும் இருக்க, எட்வர்ட் ஜிஷலை கண்டு பிடித்து அவளை அண்டாலஷியாவிற்கு கூட்டி செல்ல வருகிறான். ஜிஷல் ராபர்ட்டை பிரிய மனமில்லாது எட்வர்டிடம் தான் நியூ யார்க்கில் நடைபெறும் கிங் அண்ட் கியீன் பால் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அண்டாலஷியா செல்லலாம் என கூறுகிறாள். அதே நேரம், நான்சிக்கு ராபர்ட்டின் மாலை புறாக்களால் வந்தடைகிறது. அம்மாலையினை கண்டு அன்று இரவு நான்சி சமாதானமடைந்து, ராபர்ட்டுடன் கலை நிகழ்ச்சிக்கு வருகிறாள். எட்வர்டும், ஜிஷலும் அதே கலை நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.

இனிமேலும் நதேநிஎளை நம்ப கூடாது என்றெண்ணி நரிஷா தானே ஜிஷலை கொல்ல கலை நிகழ்ச்சிக்கு வருகிறாள். நரிஷா, தன் வஞ்சக வார்த்தைகளால் ஜிஷலை நம்ப வைத்து ஆப்பிளை சாப்பிட வைக்கிறாள். சாப்பிட்டதும் ஜிஷல் அனைவரின் முன்பு மயங்கி விழுகிறாள். அவளை காப்பற்ற ஒரே வழிதான் இருக்கிறது என்பதை ராபர்ட் அறிந்து அவளை காப்பற்ற முயலும் நேரம் அவளின் உண்மையான காதல் ராபர்ட் வசம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. பிறகு ஜிஷல் உயிர் பிழைத்து யாருடன் தன் மீத வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பதை திரைப்படம் அசாதாரண சாகசக் காட்சிகளுக்கிடையே காண்பிக்கிறது.

இக்கதையும், இதில் வரும் கதாப்பாத்திரங்களை தயார் செய்வதற்கும் மட்டுமே இதன் இயக்குனர் கெவின் லிமா (Kevin Lima) மற்றும் கதாசிரியர் பில் கெல்லிக்கு (Bill Kelly) எட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. முதலில் இதன் திரைக்கதையை பார்த்த வால்ட் டிஸ்னி நிறுவனம் காதல் மற்றும் மணமுறிவு விஷயங்கள் கதையில் மேலோங்கி இருந்ததால் இத்திரைப்படத்தை குழந்தைகளுக்கான திரைப்படமாக இதனை எடுக்க முடியாது என்பதில் தீவிரமாக இருந்தது. இதனால் பில் கெல்லி இதன் திரைக்கதையினை டிஸ்னி அனுமதி அளிக்கும்வரை பலமுறை மாற்றிஎழுதி இறுதியில் 2006ல் திரைப்படத்தை துவங்கினர். 

ஜிஷல் கதாப்பாத்திரத்திற்காக முன்னூறுக்கும் மேற்பட்ட நடிகைகள்  பரிந்துரைக்கப்பட்டு அதில் எமி ஆடம்ஸ் (Amy Adams) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் நடிப்பு ஒன்றே இத்திரைப்படத்தின் மிக பிரதானமான வெற்றிக் காரணி என்று சொல்லுமளவுக்கு தனக்கே உண்டான நகைச்சுவை பாணியில் வெகுளித்தனமாக நடித்து வெழுத்து வாங்கியிருப்பார்.

விஷுவல் எஃக்ட்ஸ் (Visual Effects) மிக பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அண்டாலஷியா என்ற மாய உலகில் நடைபெறும் விஷயங்கள் 2D அனிமேஷனிலும் நியூ யார்க்கில் நடைபெறும் சம்பவங்கள் நிஜமாகவும் எடுக்கப்பட்டிருப்பது வித்யாசமான முயற்சி. புறாக்கள் மற்றும் எலிகள் வீட்டை சுத்தம் செய்யும் காட்சியில் க்ளோஸ் அப்பில்(Close-Up) உள்ள இரு எலிகள் மற்றும் இரு புறாக்கள் தவிர மற்ற அனைத்தும் கம்ப்யூட்டர் கொண்டு 3D அனிமேஷனில் உருவாக்கப்பட்டு கிரீன் ஸ்கீரீன் டெக்னாலஜியில் நிஜக் காட்சிகளுடன் இணைத்துள்ளனர். 

இத்திரைப்படத்தில் பரவலாக பேசப்பட்ட முக்கிய அம்சங்களுள் மற்றொன்று இசை. வால்ட் டிஸ்னியின் பல படங்களுக்கு இசையமைத்த அலன் மேன்கேன் (Alan Menken) இதில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் மூன்று பாடல்களுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது. 

ஃபேண்டசி, நகைச்சுவை, காதல் மற்றும் சாகசம் (Adventure) என அத்தணை சமாச்சாரங்களும் ஒரே ஆங்கில படத்தில் வழக்கமாக நம்மால் பார்க்க முடியாது. ஆனால். இத்திரைப்படம் அந்த அத்தனை விஷயங்களையும் தன்னுள் அகப்படுத்தி ஒரு தரமான பொழுதுபோக்கு சித்திரமாக வெளிவந்து வெற்றி பெற்றது.

ட்ரெயிலர் :

0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.