Monday 4 April 2011

எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் (L.A. Confidential) ஆங்கில திரைப்படம் 1997ல் வெளிவந்து விமர்சகர்களால் பெரிதளவு பாராட்டப்பட்டு, ஒன்பது ஆஸ்கார் (Oscar) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். அதில் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும், அமெரிக்காவின் மிக முக்கிய நான்கு விமர்சகர் அமைப்புகளிடமுமிருந்து (The National Board of Review, The New York Film Critics Circle, The Los Angeles Association of Film Critics & The National Society of Film Critics), மிகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும், லண்டன் திரைப்பட விமர்சகர் குழுவால் (London Film Critics' Circle) சமீபத்திய முப்பது வருட திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம். அதுமட்டுமில்லாது, அதுவரை ஓரிரு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருந்த ரஸ்ஸல் குரோவிற்கு (Russell Crowe) இத்திரைப்படம் மூலமாகவே மிக பெரிய அங்கீகாரம் உலகளவில் கிடைத்தது என்பதிலிருந்து இத்திரைப்படத்தின் தரத்தினை நாம் உணரலாம்.

ஜேம்ஸ் எல்ராய்
சிறந்த திரைப்படங்கள் அதன் மதிப்பினை அவை உருவாகும் தருணத்தில் பெரும்பாலும் பெறுவதில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்திரைப்படத்தினை கூறலாம். ஏனெனில், திரைப்படத்தின் இயக்குனர் கர்டிஸ் ஹன்சன் (Curtis Hanson), திரைப்படத்தின் மூலமான அதே பெயரினைக் கொண்ட நாவலை தன் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் (Warner Bros.) -யிடம் திரைப்படமாக கொண்டு வரலாம் எனக் கூறியபோது அவர்கள் ஒப்புக்கொண்ட போதிலும் அதனை எழுதிய ஜேம்ஸ் எல்ராய் (James Elroy)  அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவரின் முந்தய நாவல்களில் சில திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருந்தன. அதில் எந்த திரைப்படமும், அவருக்கு முழுவதுமான திருப்தி அளிக்கவில்லை. அதுமட்டுமில்லாது அந்நாவலின் கதை கிட்டத்தட்ட எட்டு பிரதான நிகழ்வுகளின் கோர்ப்பாகவும் அவை ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தொடர்புடைய பல சிறு நிகழ்வுகளின் வாயிலாக ஒன்று சேர்வதாக மிக கடினமான கதை உள்ளடக்கத்தினை கொண்டிருந்தது. இதனால் இதனை தெளிவாக ஒரு திரைப்படமாக கொண்டு வருவது சாத்தியமில்லை என்றே நம்பியிருந்தார். எனினும் இயக்குனர் கர்டிசின் நம்பிக்கையின் பேரிலும், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பாக இருந்ததின் காரணத்தினாலும் அவர் அரை மனதுடன் ஒப்புக் கொண்டார். ஆனால் பிறகு திரைப்படத்தினை கேன்ஸ் (Cannes) திரைப்பட விழாவில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பின்வருமாறு தெரிவித்தார். 

"இத்திரைப்படம் என் வாழ்வில் நிகழ்ந்த சிறந்த நிகழ்வுகளுள் ஒன்று. இத்தகைய சிறந்த தரத்தினை கொண்ட திரைப்படத்தின் மூலத்தை (நாவல்)  எழுதும் இவ்வாறான நிகழ்வு இனி எப்போதும் எனக்கு நிகழபோவதுமில்லை."   

ரஷ்ஷல் க்ரோவ்
திரைப்படம் மூன்று காவலதிகாரிகளை முக்கிய கதாப்பாத்திரங்களாக கொண்டு லாஸ் ஏஞ்சல்ஷில் நடைபெற்ற ஒரு கொலை நிகழ்வினை மேற்சொன்ன மூவரின் வெவ்வேறான பார்வையில் 1950 -களின் பின்னணியில் ஆராய்கிறது. மூவரில் முதலாவதாக, பட் ஒயிட் (Russell Crowe) ஒரு முரட்டுத்தனமான காவலதிகாரி. தன் சிறுவயதில் தன் தந்தையால் தன் தாய் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதை கண்டு வளர்ந்ததால் எந்த ஒரு பெண்ணையும் துன்புறுத்தும் நபரை கண்டவுடன் தானாக முன் நின்று அவனை அடித்து அவன் குற்றத்தை புரியவைக்க முயல்பவன். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை வழங்குவதில் சட்டம்  தாமதித்தால் தானே அவர்களுக்கு தண்டனை வழங்கி நியாயத்தை நிலைநாட்ட முயல்பவன்.

கெவின் ஷ்பேஷி
இரண்டாம் அதிகாரி, ஜேக் வின்சென்ஷ் (Kevin Spacey) காவல் துறை ஒளிபரப்பும் தொலைகாட்சியில், ஹானர் ஹாஃப் பேட்ஜ் (Honor of Badge) என்ற நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அறிவுரையாளராக பணிபுரிபவன். அவன், தன் முகம், முக்கிய நாளிதழ்களில் இடம்பெறுவதற்காக அன்றிருந்த ஹாலிவுட் நடிகர்களின் போதை பழக்கத்தினை அம்பலமாக்கி தன்னை ஒரு பிரதான பிரமுகராக காட்டிக்கொள்ளவும் செய்தான். அதுமட்டுமின்றி ஹஷ்.. ஹஷ்... (Hush Hush) என்ற நாளிதழின் ஆசிரியர் சிட் ஹுட்கேன்ஸ் (Danny DeVito) என்பவனுக்கு ஹாலிவுட் பிரமுகர்களை பற்றிய உண்மைகளை வதந்திகளாக கூறி அதற்கு கமிஷனும் பெற்று வந்தான்.

கை பியர்ஸ்
இறுதியாக, எட்மன்ட் எக்ஷ்லே (Guy Pearce) புதிதாய் வேலைக்கு சேர்ந்த ஒரு நியாமான அதிகாரி. எதையும் நேர்மையாக சட்டத்தின் மூலமாக நிறைவேற்ற எண்ணுபவன். இவன் தந்தை மிக பெரிய காவலதிகாரியாக பணியாற்றி ஒரு கள்வனை பிடிக்கும் தருணத்தில் அவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்தவர். இதனால் தன தந்தையை விட பெரிய சாதனைகளை புரிந்து தன பெயரினை நிலைநாட்டும் உத்வேகத்துடன் உழைப்பவன்.

ஒரு இரவு லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள ஒரு தேநீர் விடுதியில் கிட்டத்தட்ட ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொள்ளப்பட்டு கிடப்பது தெரிந்து எட்மன்ட் சம்பவ இடத்திற்கு வருகிறான்.  அதில் ஓரிரு மேசிக்கன் (Maxican) குற்றவாளிகளை நிறவெறியினால் அடித்த காரணத்திற்காக தன்னால் சாட்சி சொல்லப்பட்டு அன்று வேலையிழந்த பட் ஒய்ட்டின் நண்பன் டிக் ஷ்டன்ஷ்லேன்டின் (Graham Beckel) சடலத்தையும் கொல்லப்பட்ட சடலங்களுடன் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். பின்னர் அவன் தலைமையில் அந்த கொலைகளை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

பட் ஒயிட், தன் நண்பன் கொலையானது அறிந்து, அதே கேஷினை தனக்கு தெரிந்த கொலையான பெண்ணின் விவரங்களுடன் புலனாய்கிறான். அந்த பெண்ணின் விவரங்கள் மற்றும் அவளது தொடர்புகள், லென் ப்ராகன் (Kim Basigner) என்ற ஒரு விபசாரியினிடம் அவனை கொண்டு செல்கிறது. அவள் மூலமாக பட், அவள் மற்றும் கொலையான பெண் போன்ற பல பெண்கள் நடிகைகள் போல தங்கள் வடிவத்தினை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுவது அறிகிறான். இதற்கு பின்னணியில் இருப்பது லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள மிக பெரிய பணக்காரன் பியர்ஸ் ப்ராச்சட் (David Strathairn) என்பதும் அவனுக்கு தெரிய வருகிறது. இவ்வழக்கு விசாரணையில், பட், லென்னுடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தான்.  

அதே நேரம், எட்மன்ட் அந்த தேநீர் விடுதியில் சம்பவம் நடந்த அன்று வெகு நேரம் நின்றிருந்த ஒரு காரின் அடையாளங்களை அங்கிருந்தவர்கள் மூலம் அறிந்து கொள்கிறான். அவன், அந்த காரின் மூலம் விசாரித்ததில், சிறு சிறு களவுகள் செய்யும் மூன்று நீக்ரோ இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவன் கொடுத்த வாக்கு மூலத்தில், அவர்கள் மூவரும், அந்த தேநீர் விடுதியினை கொள்ளையடிப்பதற்காக முயன்ற பொழுது அவ்விடுதியின் காசாளர் தன் துப்பாக்கியை அவர்கள் நோக்கி சுட முயல வேறு வழியின்றி தாங்கள் அவனை சுட்டதாகவும், அந்த அமளிதுமளியில் சிலரை சுட நேர்ந்ததாகவும் கூறபட்டிருந்தது. பிறகு, அவர்கள் சிறையிலிருந்து  தப்பித்து ஒரு லாட்ஜில் தஞ்சமடைகின்றனர். இதனை எட்மன்ட் உளவறிந்து, அவர்களை அங்கே என்கொவுண்டர் செய்து கொலை செய்கிறான். இவ்வாறாக இந்த வழக்கு முடிய, இதில் பெரும்பகுதி உண்மைகளை கண்டுபிடித்த என்மன்ட்டிற்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஜேக், ஹஷ் ஹஷ் நாழிதளுக்காக லாஸ் ஏஞ்சல்ஷின் சில பிரபல அரசியல் பிரமுகர்களின் ஓரினச்சேர்க்கை அந்தரங்கத்தை அம்பலபடுத்தும் பொருட்டு ஒரு வாய்ப்பு தேடிவந்த  இளைஞனுடன் ஓரிரு திட்டங்கள் வகுக்கிறான். அன்றிரவே அந்த இளைஞன் மர்மமாக அவன் தங்கியிருந்த லாட்ஜில் கொலை செய்யப்படுகிறான். ஜேக் இந்த கொலைக்கும் தேநீர் விடுதியில் நடந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதை பின்னர் எட்மன்ட்டுடன் சேர்ந்து கண்டறிகிறான். அப்பொழுது, ஜேக்கிற்கும், எட்மன்ட்டிற்கும் இந்த கொலைகளுக்கான காரணம் வேறு எனத் தெரிய வருகிறது. இதற்கு தங்கள் காவல் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலர் உடந்தை என கண்டுபிடிக்கின்றனர்.

பிறகு ஜேக்கும், எட்மன்ட்டும் ஓரணியில் நின்று உண்மையை கண்டறிய முற்பட, அதே வழக்கினை பட் ஒயிட் தன் தலைமையதிகாரி டட்லி ஸ்மித் (James Cromwell) உத்தரவின் பேரில் அவருடன் இணைந்து கண்டறியும் போது, இவ்விரு அணிகளும் ஒன்றுகொன்று எதிரான பாதையில் மாற பல நிகழ்வுகள் நிகழ்கிறது. இதற்கு மூலக்காரணம் யார் என தெரிந்து கொண்ட ஜேக், அந்த நபராலேயே சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கொலை செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் நாம் முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் திரும்பி அதுவரை அங்கொன்றும் இங்கொன்றும் சம்பந்தமில்லாமல் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து, உண்மை ஒவ்வொன்றையும் அசாதாரண வேகத்தில் கூறாமல் கூறி திரைப்படம் முடிவுபெறுகிறது.

கிம் பேசின்ஞர்
திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து பேசும்போது, முக்கியமாக நியோ-நோய்ர் (Neo-Noir) திரைப்பட வகை குறித்து புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நாம் இத்தகைய புலனாய்வு திரைப்படங்களை காணும்பொழுது, புலனாயப்படும் நிகழ்வு எவ்வாறு, எங்கு, யாரால், எந்த காரணத்திற்காக என்பதை படம் முடியும் தருவாயில் அக்கு வேறு ஆணி வேறாக  விளக்கப்படுவதை நாம் பல திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். பெரும்பாலும் இத்தகைய விளக்கங்கள், இந்திய திரைப்படங்களில், குற்றவாளி அல்லது வில்லன் தன்னிடம் அகப்படும் கதாநாயகனை உடனே கொல்லாமல் தான் செய்த கொலையினை அல்லது குற்றத்தினை எதற்கு ஏன் செய்தான் என்பதை தன் பெருமையை பறைசாற்றும் விதமாக கூறும் விதமாக பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவது வாடிக்கை.  இத்தகைய காட்சிகள் மிக வேடிக்கையாக தோன்றும் போதிலும் பார்வையாளர்களுக்கு எப்படியாவது ஒரு சம்பவத்தின் பின்னணியினை தெரியபடுத்த இயக்குனர்கள் முயற்ச்சிக்கும் உத்தி என்பதை ஒப்புகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில், பார்வையாளர்கள் திரைப்படம் ஒன்றும் புரியவில்லை என புறக்கனித்துவிடுவர் என்ற ஐயம் இயக்குனர்களை இவ்வாறு காட்சியமைக்க தூண்டுகிறது.

ஆனால் நியோ-நோய்ர் திரைப்படங்கள் பொதுவாக இத்தகைய எந்த காட்சிகளையும் உள்ளடக்கி இருக்காது. ஏனெனில் பொதுவாக இத்தகைய திரைப்படங்கள், பார்வையாளர்களிடம், வெறுமனே திரைப்படத்தின் கதையை காண்பிக்காமல் ஒவ்வொரு நிகழ்வும் எதற்காக நடக்கிறது என்பதை பார்வையாளர்களே யூகிக்கும் வண்ணம் மிகவும் குழப்பமான திரைக்கதையுடன் நகரும். இறுதியில் ஒரு மிகப்பெரிய முடிச்சு அவிழும் பொழுது பிற காட்சிகள் அனைத்தும் ஏன் நிகழ்ந்தது என்பதை பார்வையாளர்களே முடிவெடுக்கும் வகையில் அதன் இறுதிகாட்சி அமைந்திருக்கும். கிட்டத்தட்ட நாம் நிஜத்தில் ஒரு சம்பவத்தினை  பற்றி பலரின் மூலம் பகுதி பகுதியாக கேள்விப்படும்போது அவை முழு விளக்கத்துடன் இல்லாதபோதும் நாம் ஒருவாறு இவை இதற்காகத்தான் நிகழ்ந்திருக்கும் என ஒரு தெளிவு நிலைக்கு வருவது போன்றதான ஒரு அனுபவத்தை கொடுப்பது இத்தகைய திரைப்படங்கள்.

கர்டிஸ் ஹன்சன்
அத்தகைய திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கிய பத்து திரைப்படங்களுள்  இத்திரைப்படம் இடம்பெருமளவிற்கு இத்திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கர்டிஸ் தன் முப்பது வருட திரையுலக அனுபவத்தினையும் இந்த ஒரு திரைப்படத்தில் வெளிக் கொணர்ந்திருப்பார். ஏனெனில் இத்திரைப்படத்தில் அவர் பேசாத சமுக பிரச்சினையே இருந்திருக்காது எனுமளவுக்கு 1950ல் லாஸ் ஏஞ்சல்ஷில் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளான போதை பொருள் கலாச்சாரம், ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், கடத்தல், நிறவெறி, அதிகார துஷ்ப்ரயோகம், பெண் கொடுமை என அனைத்து விஷயங்களையும் கூறியிருப்பார். அதுமட்டுமில்லாது பதவி வேட்கை, காதல், குற்ற உணர்ச்சி போன்ற மனம் சார்ந்த உணர்வுகளை தன் பிரதான மூன்று காவலதிகாரி கதாபாத்திரங்களின் மூலம் அழகாக வெளிபடுத்தியிருப்பார்.  கர்டிஸ் மற்றும் ப்ரையன் ஆகியோருக்கு திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது மற்றுமோர் சிறப்பு. 

திரைப்படத்தின் மிக முக்கிய இன்னொரு பலம் கதாப்பாத்திரத் தேர்வு. இத்திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரங்களாக அமைந்த மூன்று காவலதிகாரி கதாப்பாத்திரங்களில் இரண்டிற்கு, அன்று ஹாலிவுட்டில் அதிகம் அறிமுகமில்லாத ஆஷ்திரேலிய நடிகர்கள் ரஷ்ஷல் க்ரோவ் மற்றும் கை பியர்ஸ் ஆகியோரை நடிக்க வைத்ததிலிருந்தே இத்திரைப்பட குழுவின் சாதுர்யத்தையும், தையரியத்தையும் அறியலாம்.  அதிலும், ரஷ்ஷல் க்ரோவ் குற்றவாளிகளிடம் முரட்டுத்தனமாக நடக்கும்போதிலும், துன்பப்படும் பெண்களிடம் பரிவு காட்டும் நேரத்திலும், நம் முழு கவனத்தையும் பெறுகிறார். கெவின் ஷ்பேஷி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இத்திரைப்படத்திலும் நிருபீத்திருக்கிறார். கிம் பேசின்ஞர் தன் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றார். 1997-ல் வெளிவந்த டைடானிக் திரைப்படம் தன் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் எதிர்பார்ப்பால் இத்திரைப்படத்திற்கு எதிராக அனேக ஆஸ்கார் விருதுகளை அள்ளிசென்ற போதிலும், மிக நேர்த்தியான திரைப்படங்களின் வரிசையில், டைடானிக் மட்டுமல்லாது அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களை விட இது முன்னணியில் நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் - ஒரு கடந்து போன சமூகத்தின் அவலம்.

ட்ரெயிலர்

0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.