Wednesday 23 February 2011

ஒய்ல் யு வேர் ஷ்லீப்பீங் - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்



ஒய்ல் யு வேர் ஷ்லீப்பீங் (While you were sleeping) - இத்திரைப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி (Romantic Comedy) வகையினைச் சேர்ந்தது. சான்ட்ரா புல்லாக்கை (Sandra Bullock) நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சேர்த்தத் திரைப்படம் என்றே கூறலாம். இதில் நடித்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதினை சான்ட்ரா பெற்றதிலிருந்தே அது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். அதே சமயம் சான்ட்ரா நடித்து வெளி வந்த ஸ்பீட் (Speed) திரைப்படமும் வணிகரீதியாக வெற்றி பெற்று அவருக்கு ஒரு நீங்கா இடத்தை ஹாலிவுட்டில் (Hollywood) பிடித்து தந்தது. 

திரைப்படத்தில், லூசி  (சான்ட்ரா புல்லாக்) தனிமையில் பெற்றோரை இழந்து வாழும் ஒரு பெண். லூசி சிகாகோ ரயில் நிலையத்தில் பயணக் கட்டணம் வசூலிப்பவராக வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள். தினமும் காலை, மாலை ரயிலில் பிரயாணிக்கும் ஒருவனின்பால் (Peter Gallagher) தன்னையுமறியாமல் இணக்கவரப்படுகிறாள். தான் அவனுடன் இருந்தால், தான் சிறு வயதில் கனவு கண்ட அந்த கனவு வாழ்க்கை கைகூடும் எனத் தீர்க்கமாக நம்புகிறாள்.

ஒரு கிருஷ்துமஸ் அன்று, லூசி தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு விழாவிற்கு விடுப்பு அளித்துவிட்டு எல்லா விசேஷ நாட்களைப் போல தான் மட்டும் பணி செய்து கொண்டு இருக்கும் தருணத்தில் அந்த ஒருவன் சிலரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்படுகிறான். லூசி எதிரில் வரும் ரயிலினையும் பொருட்படுத்தாது, உடனே தண்டவாளத்தில் இறங்கி அவனை காப்பாற்றுகிறாள். அவன் பிறகு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறான். 

மருத்துவமனையில் அவன் கோமாவில் இருப்பதால் அவனை காண அவனுடைய குடும்பத்தினருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறி அவனை காண வந்த லூசியிடம் அலுவலர்கள் அவள் அவனுக்கு என்ன உறவு என்று வினவுகின்றனர். லுசியால் தான் அவனை ஒருதலையாக காதலிப்பதாகவும் அவன் பால் உள்ள அக்கறையினாலே அவனை காண வந்ததாகவும் கூற இயலவில்லை. அதே நேரத்தில் தனக்கு தானே லூசி தான் அவனை மணக்கப்போகும் பெண் என சொல்லிக் கொண்டு தன்னைத் தேற்றிக் கொள்கிறாள். இதனை பின் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நர்ஸ் (செவிலி) உடனே அவளை நோயாளியின் வருங்கால மனைவி என்று லூசியிடம் வினவிய அலுவலர்களிடம் கூறி அவளை அவனைக் காண அழைத்துச் செல்கிறார். 

அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த அவனின் குடும்பத்தினர், தன் மகன் பீட்டர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளானா என வினவுகின்றனர். அலுவலர்கள் பீட்டர், அவன் வருங்கால மனைவி லுசியால் காப்பாற்றப் பட்டதாகவும், இன்னும் அவன் கோமாவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத லூசி அதனை மறுக்க முயலும் அதே நேரத்தில் அதனை மறுத்து அவர்களின் கவலையை மேலும் அதகரிக்க விரும்பாமல் பீட்டர் கோமாவில் தெளியும் வரை மறுக்காமல் நடித்து விடலாம் என முடிவெடுக்கிறாள்.  

இவ்வாறாக, ஒரு வாரம் லூசி பீட்டரின் வருங்கால மனைவியாக நடித்து கொண்டிருக்கும் வேலையில் பீட்டரின் சகோதரன் ஜாக்க்குடன் (Bill Pullman) லூசி  இயல்பாக காதல்வயப்படுகிறாள். ஒருவாறாக கோமாவிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பீட்டரால் தன் வருங்கால மனைவி என தன் குடும்பத்தாரால் கொண்டாடப்படும் லூசியை அடையாளம் காண முடியவில்லை. (உண்மையில் அவனுக்கு அவள் யாரென்றே தெரியாத பொழுது எங்கு அவளை அடையாளம் கண்டு கொள்வது?). இதனால் பீட்டர் குடும்பத்தினர் அவனுக்கு கஜினி பட சூர்யா போன்று அம்னீசியா என நம்புகின்றனர். பீட்டரும் தன் குடும்பம் நம்புவது போல தனக்கு  அம்னீசியா என்று நம்பி லூசி தன்னால் காதலிக்கப்பட்டு கரம் பிடிக்கப்போகும் மனைவி என நம்புகிறான். பின்னர் பீட்டர் லூசியிடம் தன்னை வரும் வாரத்திலேயே மணமுடிக்க சம்மதம் கேட்கிறான்.

இத்தருணத்தில், லூசி மணமுடிக்கப்போவது  தான் சிறு வயதிலிருந்தே கனவு கண்ட காதலன் பீட்டரையா  அல்லது தான் உண்மையிலேயே காதல் வயப்பட்ட ஜாக்கையா என்ற முடிவை மிகவும் இயல்பான நகைச்சுவையுடன் குடும்பத்தோடு காணும் விதத்தில் திரைப்படம் காட்டுகிறது. 

மிகவும் இயல்பான திரைக்கதை மற்றும் அமெரிக்கர்களால் மிகவும் கொண்டாடப்படும் கிருஷ்மஷ் பருவத்தில் கதை நகர்வதால் இது நிச்சயமாக வெற்றி பெரும் என்ற நம்பிக்கை, படம் எடுக்கத் துவங்கும் முன்னரே சான்றாவிற்கு இருந்தருக்க வேண்டும். அதனால்தான் என்னவோ முன்னதாக நடிக்கவிருந்த டெமி மூர் (Demi Moore) மறுத்த போது தானே முன்வந்து இத்திரைப்படத்தை ஒப்புக்கொண்டு நடித்தார். 

திரைப்படம் மற்ற ரொமாண்டிக் காமெடி வகை திரைப்படங்கள் போலவே  சான்றாவின் (Lead Female Character) கதாப்பாத்திரத்தை சுற்றியே நகர்கிறது. சான்றா தன் அளவான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கறார். ஒரு மாலை பொழுதை உங்கள் பாட்னருடன் இனிமையாக கழிக்க வேண்டுமா? கண்டிப்பாக இத்திரைப்படம் உங்கள் பொழுதை இனிதாக்கும். 

ட்ரெய்லர்: 




0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.