Saturday 26 February 2011

டேஞ்சரஸ் பியூட்டி - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்



டேஞ்சரஸ் பியூட்டி (Dangerous Beauty), 1998 ல் வெளிவந்த, வரலாற்றை மையமாக கொண்டத் திரைக் காவியம். ஆனால் சரியான விளம்பரம் இல்லாத காரணத்தினால் இத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.  எனினும் இத்திரைப்படம் வரலாற்றை விரும்பும் எவரும், தவறாமல் பார்க்க வேண்டியத் திரைப்படம். ஏனெனில், இது வெரோனிக்கா ஃபிரான்கோ (Veronica Franco) என்கிற வரலாற்றைப் புரட்டி போட்ட புதுமை பெண்ணின் வாழ்க்கையை  சித்தரிக்கும் நல்ல திரைப்படம்.  

இத்திரைப்படம் வெனிஸ் நகரை கதைக்களமாக கொள்வதால் அந்நகரைப் பற்றிய அறிமுகம் இங்கே.

வெனிஸ் நகரம்
வெனிஸ் நகரம் ஒரு விந்தையான நகரம். அங்கு நாம் பயணிக்கும் தார் அல்லது மண் சாலைகளுக்குப் பதிலாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு படகுகளால் போக்குவரத்து இன்றளவும் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில், நகரமே தண்ணீரால் சூழப்பட்ட சதுப்பு நிலத்தில் அமையப் பெற்றது.  அதனால், அன்று பகைவர்களிடம் தப்பித்து வந்த ரோம் மக்கள், அந்நிலத்தில்  பல நூறு பைன் மரங்கள் செருகி அதன் மேல் தங்கள் வீடுகளை கட்டினர். ஆனாலும் மழை வந்து என்றுமே நீர் நகரைச் சுற்றி தேங்கியிருந்தது. அதனால் அவர்கள் நீரை கடலில் கொண்டு சென்று கலப்பதற்கு, வடிகால் முறையில் நகரின் இடையே  கால்வாய்கள் அமைத்தனர்.  பிறகு, அக்கால்வாய்கள் அந்நகர மக்களால்  போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.  

அந்நாளில் அங்கு திருமணம் ஆண்களால் வியாபாரம் போன்று கருதப்பட்டது. பெண் வீட்டார் மணமகனின் பதவி கல்விக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுத்து தன் மகளை மணமுடித்து வைத்தனர். (இன்றளவும் நம் ஊரில் இதே நிலைமைதான்!) பிரபு குலத்தில் தங்கள் பதவிக்ககாக அல்லது ஆட்சி நிலத்தை விரிவு படுத்துவதற்காக தங்களுக்குள் திருமணங்கள் நடத்திக் கொண்டனர். பெண்களுக்கு, பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்ட்டது.  ஆணின் விருப்பங்கள் பெரிதாக மதிக்கப்பட்டு பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது.  

அத்தகைய நகரில் கி.பி 1450ல் வெரோனிக்கா தன் பதினெட்டு வயதில் சக பெண்களை போல அல்லாது கதை மற்றும் கவிதைகளில் திளைத்திருந்தாள். கவிதை எழுதுவதில் கெட்டிக்காரியாகவும் இருந்தாள். வெரோனிகாவின் தோழி பிட்ரைஷின் (Beatrice) அண்ணன் மார்கோ (Marco) வெனிஸ் நகருக்கு வருவதாகத் திரைப்படம் துவங்குகிறது. பார்த்தமட்டிலுமே, இருவரும், ஒருவரின் ஒருவர் மேல் காதல் வயப்படுகின்றனர். மார்கோ பிரபு வம்சத்தை சேர்ந்தவன். மார்கோவின் தந்தை பீட்ரைஷை தன் சொந்த அரசியல் காரணங்களுக்காக ஒரு வயது முதிர்ந்த மேட்டுக்குடி பெரியவருக்கு மணமுடிக்கிறார். அன்றே அவர் மார்கோவை அழைத்து அவன் வெரோனிக்காவை காதலிக்கலாம் ஆனால் அவளை, அவன் எந்நாளும் மணமுடிக்கமுடியாது என எச்சரிக்கிறார்.   

வெரோனிக்கா 
வெரோனிக்கா மார்கோவை தன்னை மணமுடிக்குமாறு வினவும் பொழுது அவன் தன்னிலையை உணர்த்திச் சொல்லி அவளை என்றும் காதலிக்கவே விரும்புவதாக கூறுகிறான். இதனால் அவனை வெரோனிக்கா வெறுத்து விலகுகிறாள். காதல் துயரில் தவிக்கும் தருணத்தில், அவளின் தாய் அவளை தன் குல தொழிலான மேட்டுக்குடி விலைமகளாக (Courtesan) வற்புறுத்துகிறாள். ஏனெனில்,அவளின் தாய் வெரோனிக்கோவோடும், அவளின் தம்பி தங்கையோடும் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வெரோனிக்கா அன்றைய காலகட்டத்தில் அவளால் தன் குடும்பத்தை இவ்வழியிலன்றி வேறு எத்தொழிலிலும் காப்பாற்றமுடியாத நிலையில் இருந்தாள்.  அதே நேரம் அவள் தாய், மேட்டுக்குடி விலைமகளாக இருப்பதில் உள்ள நற்வாய்ப்புகளை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள். அக்காலத்தில் மேட்டுக்குடி விலைமகள் ஆண்களுக்கு நிகராக கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர். அதற்கு காரணம், அன்று அவர்களுக்கு மற்ற பெண்களுக்கு மறுக்கப்பட்ட எல்லா உரிமைகளும் ஆண்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆண்கள் அவர்களின் அழகினில் மயங்கி இருந்த காரனத்தினலோ என்னவோ அவர்களை எந்த வகையிலும் மற்றப் பெண்களை போல அடக்கி ஆளவில்லை. வெரோனிகா தான் சிறந்த கவிதைகளை படிக்கவும், இயற்றவும் இத்தொழில் உதவும் என்ற காரணத்தினாலும், இதைதவிர வேறு எந்த வழியும் இல்லாத காரணத்தினாலும் மேட்டுக்குடி விலைமகளாக மாறுகிறாள்.  

அவளின் தாய், அவளுக்கு ஆண்களை மயக்கும் கலைகளை கற்றுத் தருகிறாள். சிறுது காலத்திலேயே தன் தொழிலில் இருந்த மற்றவர்களை விட அவள் சிறந்து விளங்கினாள். அரசவையில் இருந்த பெரும்பாலானவர்களை தன் வாடிக்கையாளராகப் பெருமளவுக்கு முன்னேறியிருந்தாள். அதே நேரம், தன் பிரபு பதவியின் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள மார்கோ, குலியா என்ற இன்னொரு பிரபு குலமகளை மணமுடிக்கிறான். மார்கோ எவ்வகையிலும் வெரோனிக்காவின் அறிவாலும், அழகாலும் தான் கவரப்பட்ட வகையில் தன் மனைவி குலியாவிடம் தான் கவரப்படவில்லை என்பதை வெகு விரைவில் உணர்கிறான். அவன் திரும்பவும் அவளின் காதலை பெற முயல்கிறான். ஆனால் அவள் இன்னொரு வாடிக்கையாளராக கூட அவனை ஏற்றுக்கொள்ள இயலாது என மறுக்கிறாள். 

வெரோனிக்கா மீது ஆசை கொண்ட ஏழை கவிஞன் மாஃபியோ அவளை அணுகுகிறான். அவனை வெரோனிக்கா தன் விலையை அவனால் தர முடியாது எனக் கூறி அவனை தவிர்க்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த அவன் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குகிறான். இவள் அவனோடு வார்சண்டை கொண்டு அவனை வீழ்த்தும் நேரத்தில் அவன் அவளை மூர்க்கமாக தாக்கி காயமுறச் செய்கிறான். மார்கோ அவனை தாக்கி கைது செய்ய உத்தரவிட்டு வெரோனிக்காவுக்கு உதவுகிறான். இச்சம்பவத்தால் அவன் காதலை உணர்ந்த வெரோனிக்கா, தன் தொழிலை விட்டு  அவனிடம் மட்டும் இருக்கலானாள்.   

வெனிஸ் மீது ஒட்டமான் அரசு போர் தொடுத்தது. வெனிஸ், பிரெஞ்சு அரசர் மூன்றாம் ஹென்றியிடம் உதவி கேட்டது. அரசரை மகிழ்விக்க முதல் தர மேட்டுக்குடி விலைமகள்  வெரோனிக்கா அனுப்பப்படுகிறாள். அவள் சென்றதில், மார்கோ அவளின் மீது கோபம் கொள்கிறான். வெரோனிக்கா,  மார்க்கோ கணவன் என்ற கடமையின் பெயரால் குலியாவிடம் செல்வது போலதான் தான் பிரெஞ்சு அரசரிடம் தன் நாட்டின்பால் கொண்ட மரியாதையினால் சென்றதாக தன்னிலை விளக்கமளித்தும்,  அவன் அவளோடு கோபம் கொண்டு போருக்கு செல்கிறான். 

இதே சமயத்தில், வெனிஸ் நகரை பிளேக் நோய் தாக்கி பலரை கொல்கிறது. இத்துயர், வெனிஸ் நகர மக்களுக்கு வர, அவர்களின் தவறான நடத்தையே காரணம் என மக்கள் கருதினர். இதனால் மக்கள் வெரோனிக்கா மற்றும் மற்ற மேட்டுக்குடி விளைமகர்களை தாக்கி, அவர்களின் சொத்துக்களை சூறையாடினர். அரசு, மக்களை கட்டுபடுத்த வெரோனிக்கா மீது ஆண்களை வஞ்சகமாக மயக்கும் சூன்யக்காரி (witchcraft) என்ற பழியை போட்டு அவளை சிறையிலடைக்கிறது. திரும்பி வந்த மார்க்கோ சிறையில் அவளிடம் அரசு சொல்லும் அத்தனை பொய்ப் பழிகளையும் ஏற்று மன்னிப்பு கேட்டு உயிர் தப்பிக்குமாரும், அவள் தனக்கு வேண்டுமென்றும் கெஞ்சுகிறான். 

வெரோனிக்காவிற்கு மன்னிப்பு கேட்க்கும வாய்ப்பைத் தவிர நீதி மன்றத்தில் பேச உரிமையில்லை. அவளுக்கு எதிராக அரசு மாஃபியோவை வழக்கறிஞனாக வாதாட வைக்கிறது. பாவத்தின் சம்பளமாக அவளின் உயிரை பறிக்க அவன் வாதாட, மார்க்கோ அவளை காப்பாற்ற முனைகிறான். ஆண்களை அத்தனை பேர் முன்னிலையில் வெரோனிக்கா நீதி மன்றத்தில் தன் விவேகமான வார்த்தைகளால் தன் நிலைக்கு தான் மட்டும் காரணமா என மன்னிப்பு கேட்கும் தொனியில் சாடி அனைவரையும் தலைகுனிய வைக்கிறாள். 

கேதரின் மக்கோர்மாக்
பிறகு, வரலாறே திரும்பி பார்க்கும் அந்த சம்பவம் அன்று நிகழ்ந்து முடிகிறது. அச்சம்பவத்தின் மூலம் இன்றளவும், வெரோனிக்கா பெண்ணிய சிந்தனைகளின் முதல் எதிரொலியாக வெனிஸ் நகரில் மட்டுமல்ல, நாமும் பேசுமளவுக்கு தன் பெயரை ஆணாதிக்க சமூகததில் ஆழமாக பதிய வைத்திருப்பதன் சாட்சியாக வெனிஸ் அரசு, மேட்டுக்குடி விளைமகர்கள் மீது எக்காரணம் கொண்டும் சூன்யக்காரி பழி போட தடை விதித்தது. வெரோனிக்கா தன் விவேகமான, உணர்ச்சித் ததும்பும் கவிதைகளால் (sonnet) வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.  

இத்திரைப்படத்தில், கேதரின் மக்கோர்மாக் (Catherine McCormack), வெரோனிக்காவின் கதாபாத்திரத்தில் தன் அழகுடன் அதே நேரத்தில் அந்த கதாபாத்திரத்திற்குரிய செருக்குடன் நடித்துள்ளார். பிரேவ் ஹார்ட்(Brave Heart) படத்தில் நடித்த கேதரீனா இக்கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சர்யப்பட வைக்கிறது அவரின் நடிப்பு.  வெனிஸ் நகர அரங்கமைப்பு மற்றும் ஆடை தேர்வு நிச்சயம் நம்மை பழமையான வெனிஸ் நகருக்கு அழைத்துச் செல்வதுடன் மட்டுமன்றி அந்த கலாச்சாரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இசையும் முதல் தர வரிசையில் உள்ளது.  இருந்த போதிலும், இத்திரைப்படத்தை எந்த ஒரு விருதும் கண்டு கொள்ளாதது வருத்தமாகவே உள்ளது.    


ஹாலிவூட் மிகைபடுத்தப்பட்ட வரலாற்றுக் கதைகளையே கொண்டாடும் என்பதற்கு இத்திரைப்படம் இன்னுமோர் சாட்சி.  


ட்ரெயிலர்:-



0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.