Saturday 5 March 2011

கிரேஷி / பியூட்டிஃபுல் - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்


கிரேஷி / பியூட்டிஃபுல் (Crazy/Beautiful), 2001ல் வெளிவந்த அமெரிக்க பதின்ம வயது காதலை, இயல்பாக சித்தரிக்கும் திரைப்படம். வெறும் இனக் கவர்ச்சி மற்றும் இதர இச்சைகளை முழுவதுமாக மிகைபடுத்தி, இதுதான் பதின்ம வயதோர்க்கான திரைப்படம் என்கிற ரீதியில் மற்ற  பதின்ம (Teen Movies) திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த வேளையில்,   அவற்றைப் போல் அல்லாது இத்திரைப்படம்  முற்றிலும் புதுமையான அணுகுமுறையில் வேறுபடுகிறது. ஒரு புதிய கோணத்தில், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் முற்றிலும் வேறுபட்டுள்ள இருவருக்கு இடையேயான காதலை, அந்த வயதுக்கே உரிய பக்குவத்துடன் அவர்கள் இயல்பாக எதிர்கொள்ளும் விதமாக இத்திரைப்படம் உணர்ச்சிபூர்வமான காட்சிகளால் நகர்கிறது.   

கிரிஸ்டன் டன்ஸ்ட்
திரைப்படத்தில்,  நிக்கோல் ஓக்லி, ஆங்கிலேய பணக்கார அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினரின் மகள். அடிப்படையில் தன் தாயின் தற்கொலையாலும், தன் தந்தையின் அலட்சியத்தாலும் மிகவும் மனச் சிதைவுக்குட்பட்டு, குடி மற்றும் போதை மருந்துகளில் மன அமைதியைத் தேடுபவள். தன் தந்தையின் இரண்டாவது திருமணம் அவளை மிகவும் பாதித்திருந்தது. தன் தாயை போலவே தன்னாலும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்து பலமுறை தற்கொலைக்கு முயன்றவள். இதனால் வாழ்க்கையில் பெரிதான குறிக்கோளின்றி தன் தந்தையின் வற்புறுத்தலில், தன் பள்ளிப் படிப்பை தொடர்பவள். 

ஜே ஹெர்னாண்டஸ்
கார்லோஸ் நுயான்ஷ், அமெரிக்காவில் வாழும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக வம்சத்தைச் சேர்ந்த ஏழைத் தாயின் இளைய மகன். தன் ஐந்தாம் வயதில் தன் தந்தை தன் குடும்பத்தை விட்டு சென்றப் போதிலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மிதவாதி. தன் தாயால் மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்டவன். தன் வாழ்க்கையில் எப்படியாவது ஒரு விமான ஓட்டியாக வர, கடினமாக படித்து வரும் சாதாரண மாணவன். தன் விமான மாலுமி படிப்புக்கான அரசாங்க படிப்புதவிக்காக மனு கொடுத்துவிட்டு காத்திருப்பவன். 

கார்லோஸ், கடற்கரையில் நிக்கோல் தன் பள்ளி ஒழுக்கக்கேடுத் தண்டனைக்காக கடற்கரையை துப்புரவு செய்யும் வேலையில் ஈடுப்பட்டிருந்த நேரத்தில் அவளை சந்தித்தான். பின் இருவரும் ஒரே பள்ளியில் பயில்வதை அறிந்து நட்பு ரீதியில் பழக்கத்தை தொடர்ந்தனர். இருவரின் பழக்கமும் நாளுக்கு நாள் இருவரின் இடையே இன்றியமையாத ஒன்றாக வளர்ந்து இருவர் மனதிலும் விருட்சமாக வேருன்றியிருந்தது. நிக்கோல் பள்ளி விதிமுறைகளை மதிக்காது குடி மற்றும் இதர வழிகளில் செல்லும் பொழுது தன்னிலை மறந்து கார்லோஷும் அவளுடன் சுற்றலானான். இதனைக் கண்டு, கார்லோஸ், நிக்கோலுடன் பழகுவது அவனது படிப்பை மட்டுமன்றி அவனது குறிக்கோளையும் பாதிக்கும் எனக் கூறி அவனின் தாய் அவனை கண்டித்தாள்.  

ஒருநாள், நிக்கோல் கார்லோஷை தன் விட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். அப்பொழுது அவளது தந்தை கார்லோஷின் குறிக்கோளை அறிந்து தான் உதவுவதாக கூறி, வரும் வாரத்தில் ஓர் சமயத்தை (appointment time) குறிப்பிட்டு தன்னை தன் அலுவலகத்தில் சந்திக்குமாறு கூறினார். கார்லோஸ், நிக்கோலின் தந்தையை அவரின் அலுவலகத்தில் சந்தித்த பொழுது அவர் தன் மகளை பற்றி குறிப்பிட்டு, அவள் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்வது மட்டுமன்றி தன்னுடன் பழகும் அவனது வாழ்க்கையையும் அழிக்க கூடிய நடத்தையை கொண்டவள் எனக் கூறி அவனை அவளோடு பழகாதிருக்குமாறு அறிவுறுத்துகிறார். 

இப்படி, கார்லோஸ் தன்னை சுற்றி இருந்த அனைவரிடமுமிருந்து நிக்கோளுடன் இருந்த பழக்கத்தை துண்டிக்குமாறு அறிவுருத்தப்பட்டான். இதனால் கலக்கமடைந்த கார்லோஸ், நிக்கோளுடன் பழகுவதை முற்றிலுமாக நிறுத்தினான். அதே சமயத்தில், நிக்கோல் அவன்பால் ஒருதலையாக காதல்வயப்பட்டிருந்தாள். தன் தாய்க்கடுத்து தன்னை மிகவும் நேசித்த கார்லோஷின் மறுப்பு அவளை மீண்டும் பெருங்குடிகாரியாக மாற்றியிருந்தது. இதனால், நிக்கோலின் மாற்றந்தாய், அவளை விடுதி பாடசாலைக்கு (Boarding School) அனுப்புமாறு அவளது தந்தைக்கு ஆலோசனை கூறி அந்த ஆலோசனையை நிறைவேற்றவும் செய்கிறாள். 

கார்லோஷின் தேர்வு நேரம் நெருங்கியது. இத்தேர்வின் முடிவுகள் அவனை அவனது குறிக்கோளை அடைய உதவும் வழிகலனாக இருக்கும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். அதே சமயம், அவனால், முழு கவனத்துடன் தன் படிப்பில் ஈடுபட முடியவில்லை. நிக்கோலின் நினைவுகள் அவனை ஆட்டிப்படைத்தது. மற்றவர்களின் சொல்பேச்சு கேட்டு அவளை அந்நியப்படுத்தியது முட்டாள்த்தனமாக அவனுக்குப் பட்டது. 

இறுதியில், கார்லோஸ் பள்ளியில் இறுதி தேர்வேழுதும்போழுது, பள்ளியில் இருந்து விடுதி பாடசாலைக்கு வெளியேறும் நிக்கோலை பார்க்கிறான். உடனே தன் தேர்வையும் பொருட்படுத்தாது, நிக்கோலை தடுத்து தான் அவளை மனப்பூர்வமாக காதலிப்பதாகவும், அவளுடன் வாழ விரும்புவதாகவும் கூறிகிறான். பின் இருவரும் தன் குடும்பத்தினருக்கு ஏதும் சொல்லாமல் ஊரை விட்டு செல்கின்றனர். நிக்கோல், செல்லும் வழியில் தன்னால் தன் காதலன் குறிக்கோள் பாழாகிறது என்ற குற்ற உணர்ச்சியில் அழுது பின் ஓர் முடிவெடுக்கிறாள். அந்த முடிவு தன்னை அலட்சியப்படுத்திய தன் தந்தையை திருத்த உதவுவதோடு மட்டுமன்றி கார்லோஷின் குறிக்கோளையும் காப்பற்றுகிறது. (அந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதை இங்கு கூறி,  நீங்கள் திரைப்படம் பார்க்கும் தருணத்தில் உள்ள சுவாரஸ்யத்தை கெடுக்க மனமில்லாது, அதை சொல்லாமல் விட்டு விடுகிறேன்).    

பொதுவாக பதின்ம திரைப்படங்களை, திரையில் காணும்போது ஒருவிதமான அந்நியத்தன்மை வியாபித்திருக்கும். காரணம், அதில் வரும் கதாப்பாத்திரங்கள் இயல்பான இளைஞர்களை சித்தரிக்காது, அவர்களை உதாரிகளை போன்று காட்டி உண்மையிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் நம்பகத்தன்மையும் அவற்றின் இயல்பான உருவகபடுத்தலினால் மெருகேற்றப்பட்டுள்ளது.

நிக்கோல் கதாப்பாத்திரம் கிரிஸ்டன் டன்ஸ்ட் (Kirsten Dunst) என்பவரால், சமுதாயத்தில் பலவேறு காரணங்களினால்  பாழ்பட்டுபோன பல இளைய வர்க்கத்தினரை மிக நேர்த்தியுடன் சித்தரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு பின்னர், கிரிஸ்டன் டன்ஸ்ட் ஸ்பைடர் மேன் (Spider Man) திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்லோஸ் நுயான்ஷாக வரும் ஜே ஹெர்னாண்டஸ் (Jay Hernandez) தன் கதாப்பாத்திரத்தை தன் அளவான நடிப்பால், கடைநிலை மாணவனின் இயல்பான ஆசைகளையும், உணர்ச்சியையும் பிரதிபலிக்கிறார். கார்லோஷின் தாயாக நடித்திருக்கும் சொலேடத் செயின்ட் ஹிலாரி (Soledad St. Hilaire) கணவனால் கைவிடப்பட்ட பல பெண்களின் (Single Mother) சரியான உவமையாக காட்டப்பட்டிருக்கிறார்.   

குறிப்பாக நிக்கோலின் தந்தையாக வரும்  ப்ரூஸ் டேவிசன் (Bruce Davison) மற்ற திரைப்படங்களில் வரும் தந்தை கதாப்பாத்திரங்களை போல அல்லாது, நிறப் பிரிவினைகளால் தன் மகளின் காதலை எதிர்க்காது, தன் மகளின் மூலம் அவளது காதலனின் வாழ்க்கை பாழ்படக்கூடாது என எண்ணி காதலை எதிர்ப்பது புதியது. 

இத்திரைப்படத்தில், காதல் மட்டுமன்றி, சமுதாய காரணிகள் எவ்வாறெல்லாம் மனித மனங்களை பாதிக்கிறது என்பதும் கூறப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட டீன் மூவியை காண விருப்பமிருப்போர் தாரளமாக கிரேஷி / பியூட்டிஃபுல் திரைப்படத்தை காணலாம். 

ட்ரெயிலர்:-

1 comments:

Anonymous said...

Why It's the Best Betting Site in the World - Wolverione
It's the place to bet and 바카라 사이트 주소 the best online betting sites in the world A guide to the online betting industry including the top UK bookies for UK

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.